வாழ்தல் எனும் சொல்



ஆடுமந்தை மக்கள் கூட்டத்திலிருந்து விலகி 
காட்டுமல்லிப்பூ போல் கானகத்தில் வாழ்ந்திருந்து 
கிடைக்கும் கனிகளை உணவாக்கி
அடித்துச்செல்லும் ஆற்றில் நீராடி 
மரம் செடியோடு உரையாடி 
நட்சத்திரங்களை எண்ணிக்கொண்டு 
புல்மெத்தையில் படுத்துறங்குபவர்கள் 
வாழ்க்கையை வரமாகப் பெற்றவர்கள் !!

பெற்றோருடன் வாழ்ந்து 
உற்றார் உறவினருடன் உறவாடி 
பண்டிகைகளைக் கொண்டாடி 
பாதுகாப்பான சூழலில் 
பதற்றமில்லாமல் வாழ்பவர்கள் 
வாழ்வை ரசித்து வாழ்கிறார்கள் !!

பணத்தை இலக்காகக் கொண்டு 
பகட்டாய் வெளிக்காட்டி
சொந்த மண்ணை எட்டிப் பார்க்க நேரமில்லாமல் 
அடுத்தவன் ஊரைச் சுற்றிப்பார்க்க 
விசா தேடி அலைந்து 
பதிவிறக்கம் செய்யப்பட்ட மென்பொருளாய் 
மனித இயந்திரம் போல் மாறிக்கொண்டு 
‘வாழ்தல்’ என்னும் சொல்லுக்கு அர்த்தமறியாமல்
காலத்தைக் கடத்திக்கொண்டிருக்கிறோம் !! 


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments :

Post a Comment